Wednesday, July 23, 2008

வேலம்பட்டி விஞ்ஞானி.-(சமூக) அறிவியல் கதை

இந்திய தொழில் நுட்பக் கழகம், சென்னை வளாகம் . அந்த உள் அரங்கில் அன்று விதவிதமான முகங்கள் தென்பட்டன.

வரிசையாக பொருட்காட்சி போன்று , பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது.. ஒவ்வொரு பந்தலிலும் , கொரியா, ஜப்பான், அமெரிக்கா என்று பேனர் எழுதப் பட்டிருந்தது.

அங்கே , ஒவ்வோரு பந்தலிலும் , ஒரு மேடையும், அதனுள் மாணவ மாணவர் , குட்டி ரோபோ போன்ற இயந்திரங்கள், எலெக்ட்ரானிக் இயந்திரங்கள், கன்னா பின்னாவென்று ஒயர்கள், ஸர்க்யூட் போர்ட்கள் சகிதம் , புரியாத வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள்..ஒரு மடிக்கணினி மூலம், யாருக்கோ , எதையோ, புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதைக் கேட்டவர்கள் புரிந்த மாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தார்கள்.


என்ன நடக்கிறது வாங்க.. யாரிடமாவது கேட்கலாம். அதோ டை அணிந்து, வழுக்கையாக , , கண்ணாடி அணிந்து, ஒரு பேராசிரியர் போல இருக்கிறாரே, அவரிடம் கேட்கலாம்..

“ஐயா , இங்கே நடப்பது என்ன”

“இங்கே, ஜப்பான் நாட்டு உதவியுடன் நடத்தப்படும் “இளம் விஞ்ஞானிகளைக் கண்டறிதல் போட்டி” யின் இறுதிச் சுற்று நடைபெறுகிறது..
போட்டிக்கான தீம், “ சயன்ஸ் ஃபார் ப்ரஸண்ட் ஹுமானிட்டி” அதாவது தற்போதைய மனித குலத்திற்கான அறிவியல்..”, நமது, உலகில், இன்றைய தினம் மனித குலத்திற்கு சவாலாக விளங்கும் ஏதேனும் பிரச்சினைகளுக்கான தீர்வு, இந்த மாணவர்களிடம் உள்ளதா என்பதை கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிப்பது இந்த்ப் போட்டியின் நோக்கம்..”

”அது சரி ஐயா, அந்த மாதிரி விசயங்களுக்குத் தான், பல்கலைக் கழகங்கள், பல கோடி செலவழித்து , பி ஹெச் டி ஆராய்ச்சிகள் நடத்துகின்றனவே.. அதில் வராத முடிவுகளா, தீர்வுகளா ?”



”முதலில் நான் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் இந்தப் போட்டிக்கான் நடுவர் குழுவில் ஒருவன் . சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணிபுரிகிறேன்.. ( நமது ஊகம் சரி தான்) .என் பெயர் நடராசன்.
தற்போது, பல பல்கலைக் கழகங்களில் நடத்தப் படும் பல ஆய்வுகள், எப்பாடியாவது , முனைவர் பட்டத்தை பெற்றுவிடவேண்டும் என்பதற்காக , மொக்கையான தலைப்புகளில் ( அது, சரி, தமிழ்ப் பதிவு அதிகம் படிப்பார் போல !!) நடை பெறுகிறது.
எடுத்துக் காட்டாக சிலவற்றைக் கூறுகிறேன்..'ஹவ் ஸ்பெரிக்கல் வாட்டர் ட்ராப்லெட்ஸ் , பிஹேவ் ஆன் எ கோனிகல் சர்ஃபேஸ் இன் நியர் அப்சொல்யூட் வேக்வம், இன் ஸ்பேஸ்”. என் கீழே ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவன் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த தலைப்பு உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்கள் தவறு அல்ல. இதற்கு கைடாக இருக்கும் எனக்கே புரியவில்லை..
அங்கே மட்டும் அல்ல..இங்கேயும் ,சில உதாரணங்கள் கூறுகிறேன்..”சங்க இலக்கியங்களில் , தலைவியின் பசலை நோய்கள்” என்ற தலைப்பில் ஆறு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, முனைவர் பட்டம் வாங்குகிறார்கள்.. இதை விட , தொடக்கப் பள்ளியில் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுக்கும் வாத்தியார், ஒரு சமுதாயத்தின் பார்வையில் மேலான தொண்டு செய்கிறார் என என்னால் சொல்ல முடியும்..”

”இங்கே நடப்பது, எப்படி வித்தியாசமானது எனக் கூறுகிறீர்கள்.?”

”இங்கே , நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போட்டி, அதற்கு விதி விலக்கானது..படிப்பு, வயது, என தகுதி நிர்ணயம் செய்யாமல், எல்லோருக்கும் பொதுவான போட்டி இது. கண்டுபிடிப்புகளின் உபயோகத்தையும், எத்துணை எளிதாக அதை உருவாக்கலாம் என்பதைப் பொறுத்தும் மட்டுமே, வெற்றி பெறுபவர் தீர்மானிக்கப் படுகிறார்..
இதோ , இந்த பந்தலில் அமர்ந்திருக்கும் மாணவர்கள், பல சுற்றுக்களைக் கடந்து தற்போது, இறுதிப் போட்டியில் அமர்ந்திருப்பவர்கள்.
இங்கே , சற்றும் எதிர்பாராத விசயம், இங்கே, இந்தியா, சார்பில் இறுதிப் போட்டியில் வந்திருக்கும் மாணவன், ஐ ஐ டி யோ, பி ஹெச் டி யோ அல்ல.. வேலம் பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பதினோராம் வகுப்பு மாணவன்..அவன் போன சுற்றுக்களில் காட்டிய கருவிகள், தற்போதைய இந்தியாவிற்கு மிகவும் அவசியமானவை..”
அவன் கண்டிபிடித்த சாதனங்களில் ஒன்று , செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி ரயில்வே, கேட் . ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும் செல்போன் மூலம் சமிஞ்ஞை கிடைக்கப் பெற்று, தன்னால் கேட் மூட வைக்கும் ஒரு சாதனம்,.அது மட்டும் அல்ல, இரு ரயில்கள் ஒரே தடத்தில் வரும் போதும், இரு ரயில்களையும் நிறுத்தி விடும்.
இதற்காகிய செலவு வெறும் ஆயிரம் மட்டுமே..இந்தச் சாதனம் நடைமுறைப் படுத்தப் பட்டால் வருடத்திற்கு ஐயாயிரம் மரணங்கள் இந்தியாவில் தடுக்கப் படும். சென்ற வருடம் , சென்னை அருகே, ஷேர் ஆட்டோ ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயலுகையில், அடிபட்டு, நூறு மீட்டர் தூரம் வரை இழுக்கப்பட்டு இருபத்தைந்து பேர், கூழானது ஞாபகம் இருக்கிறதா,.இது நாடெங்கிலும் நடக்கும் நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் ஒரே ஒரு உதாரணம் தான் “

அந்த மாணவனைச் சந்தித்து உடனே பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறதல்லவா..வாங்க போய் பேசுவோம்..அதோ கடைசிப் பந்தலில், இந்தியா என எழுதப் பட்டுள்ளது..
அவன் நீல வண்ண கால் சட்டையும், வெள்ளை சட்டையுமாக பள்ளி சீருடையில் இருந்தான்..

காலில் ரப்பர் செருப்பு அணிந்திருந்தான்....லேப்டாப்போ வேறு மின்னணு கருவிகளோ இல்லை.

”வணக்கம், உங்களைப் பற்றியும் நீங்கள் இறுதிச் சுற்றுக்கு கண்டுபிடித்த சாதனத்தைப் பற்றியும் கூற முடியுமா ?”


”என் பெயர் குருசாமி சார்.. நான் வேலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறேன். சார்..இந்த இறுதி போட்டிக்காக, மக்காத பதின்ம பொருட்களை, எப்படி, உபயோகமுள்ள மக்கும் , பொருட்களாக மாற்றுவது என்று கண்டுபிடித்துள்ளேன்..”

“அருமை...அதாவது , நான்-பயோ டீக்ரேடபள் பாலிமர் மற்றும் ப்ளாஸ்டிக் பொருட்களை, எப்படி , பயோடீக்ரடபிள் ஆக மாற்றுவது..சரியா .?”

“சார், நான் தமிழ் மீடியம் சார்.. நீங்கள் சொல்வது எனக்கு சரியாக புரியவில்லை..ஆனால் அது தான் என நினைக்கிறேன்..”

“உங்கள் சாதனம் எங்கே?”

”இல்ல சார். இப்போதைக்கு ஐடியா மட்டும் தான் இருக்கு..அந்த சாதனத்தை உருவாக்கும் அளவிற்கு பணம் இல்லாததனால் , உருவாக்கவில்லை..”

”வெறும் ஐடியாவை ,போட்டிக்கு ஏற்க மாட்டார்களே , தம்பி”

“எனக்கு வேற வழியில்ல சார். இதற்கு முன் சுற்றுக்களில் நான் கண்டுபிடித்தவை அனைத்து, குறைந்த செலவில், அதுவும் என் தலைமை ஆசிரியர் கொடுத்து உதவிய பணத்தில் செய்தது சார். ”

“நீங்கள் அரசாங்கத்திடம் உங்கள் கண்டுபிடிப்பைக் பற்றிக் கூறி, மானியம் கேட்டிருக்கலாமே” , சிங்கப்பூர் பேராசிரியர் கேட்டார். பாவம் , அவருக்கு, இங்குள்ள நிலைமை தெரியாது போல..

”கேட்டேன் சார், கலெக்டர் ஆபிஸ்ல போய் கேட்டேன்.. அவங்க, ஏற்கனவே, ராமர் பிள்ளைன்னு ஒருத்தன், ஒரே நேரத்தில சந்திரபாபு நாயுடு வரை, எல்லாத்தையும் வரிசையில நிக்க வச்சு காது குத்தினது போதாதா , அடுத்து நீ வேறயா “ ன்னு கேட்டாங்க சார்..”

”உங்கள் ஆசிரியரை, அல்லது அல்லது வேறு யாராவது, விஷயம் தெரிந்தவரை அழைத்துக் கொண்டு, அமைச்சரை பார்த்திருக்கலாமே !”

”நானும் என் தலைமை ஆசிரியரும் போனோம் சார் கல்வி அமைச்சரைப் பார்க்க .ஆனா, அமைச்சர் ,“நீங்க என்ன நாலு கோடி, அஞ்சு கோடி ன்னு, குறைந்த செலவுல , படம் எடுக்கும் தயாரிப்பாளரா , அதுக்குத்தான், இப்போ, மானியம் கொடுப்போம்..இதுக்கெல்லாம் , தர முடியாது ”ன்னு சொல்லிட்டார் சார்.”

”சரி , உங்கள் கண்டுபிடிப்பை கொஞ்சம் விளக்குங்கள்..”

அவன் சொல்ல சொல்ல பேராசிரியரும் மற்ற நடுவர்களும் கவனமாக கேட்டார்கள்..

முடிவில்., அந்த வருடத்துக்கான் இளம் விஞ்ஞானிகள் பெயர்கள் அறிவிக்க்கப்பட்டன

அதில் குருசாமியின் பெயர், இல்லை...

போட்டி முடிந்து, அவரவர் நாட்டுக்கு , ஊருக்கு சென்றுவிட்டனர்..

சிறிது நாட்கள் கழித்து, வேலம்பட்டி, பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் ஒன்று வந்திருந்தது...ஆங்கிலத்தில் இருந்த அக்கடிதம்,தமிழில்.


“இது உங்கள் பள்ளி மாணவர் குருசாமி என்பவர் இறுதிச் சுற்றுக்க்காக , கண்டுபிடித்த ஒரு கருத்தைப் பற்றியது. அவர் சொல்லிய கருத்துப் படி, ஒரு சாதனைத்தை, நாங்கள் இங்கே செய்து பார்த்தோம்.., இது தற்போது, உலகையே ஆட்டிப் படைக்கும் வினாவிற்கு விடையாக அமைந்துள்ளது, என நீருபணம் ஆனதை பெரு மகிழ்வுடன் கூறிக்கொள்கிறோம். ஆண்டுக்கு லட்சக்கணக்கான் டன் கணக்கில் ப்ளாஸ்டிக் குப்பைகள் இந்தப் பூமியில் கொட்டப்படுகின்றன. இதனால் ஏற்படும் , சுற்றுச்சூழல் கேடு, நம் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
விலங்குகளின் கழிவுகளில் இருந்து எடுக்கப் படும் ஒரு வகையான பாக்டீரியாவை வைத்து, பாலிமர் மூலக்கூறுகளை உடைத்து, மறுபடியும், அதை, அடிப்படை சேர்மங்களாக மாற்ற முடியும் என காண்பித்த கருத்து, தற்கால நோபல் பரிசு பெறும் கண்டுபிடிப்புகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல..இதற்காக, எங்கள் அரசாங்கம், அந்த மாணவனுக்கு பத்து மில்லியன் யென் பரிசாக வழங்குகிறது..இந்த மாணவனின் எதிர்கால ஆராய்ச்சிக்கான அத்தனை உதவிகளையும் , எங்கள் நிறுவனம் தரத் தயாராக உள்ளது .அந்த மாணவரை, எங்கள் நாட்டுக்கு அழைத்து , பாராட்டு விழா நடத்த இருக்கிறோம்.”


அதற்கு அடுத்த நாள் எல்லா பத்திரிக்கைகளிலும், கல்வி அமைச்சர், சிரித்தவாறே, குருசாமியைக் கட்டிப் பிடித்து, அவனுக்கு மானியம் அளித்த படம் வெளியானது..




மறுப்புக் குறிப்பு:

இக்கதையில் வரும் குருசாமி, பாலிமர், பயோடீக்ரேடபள், மான்யம் , உள்பட அனைத்தும், முழுக்க முழுக்க, தசாவதாரம் கயாஸ் தியரி அளவுக்கு கற்பனையே.

Wednesday, June 25, 2008

பொண்ணு பாத்துட்டு பிடிக்கலைன்னு சொன்னா, தப்பா ?

பொண்ணு பாத்துட்டு பிடிக்கலைன்னு சொன்னா, தப்பா ?



வாழ்க்கையிலேயே , நமக்கு ரொம்ப சஸ்பென்ஸ், த்ரில் , எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்துவது , நம்மோட வாழ்க்கைத் துணையை முதன் முதலா சந்திக்கும் அந்த நேரம் தான்.
சில பேருக்கு அதிர்ஷ்டவசமா , பார்க்கிற முதல் பொண்ணே புடிச்சிப் போயி, கல்யாணம் அமைஞ்சிருது..
ஆனா , சில பேரு , பொழுது போலைன்னா , "வாங்க, அப்படியே , ஜாலியா , பொண்ணு பாத்துட்டு வரலாம்" ன்ற ரேஞ்சுக்கு திரிவாங்க...
ஆனா என் நண்பன் ஒருத்தன் இருக்கிறான் அவனுக்கு வரப் போற மனைவிக்கு ,சில தகுதி வச்சிருந்தான்.
. முழங்கால் வரையும் கூந்தல் இருக்கணும்( அவனுக்கு முடி, பின்னந்தலையில் இருந்து தான் ஆரம்பிக்கும்). சிரிக்கும் போது குழி விழணுமாம். ( தலைவருக்கு, சிரிக்காமலேயே , ஆழக் குழி இருக்கும் , டொக்கு கன்னம் ). உதட்டோரம் மச்சம் வேணுமாம்..(இதில் மட்டும் அவன் க்வாலிபைடு .உடம்பெல்லாம் மச்சக் கலர் தான் ) .அப்புறம், வாய் , உதடு, இடுப்பென்று , தலையிலிருந்து பாதம் வரை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ப்ளான் வைத்திருந்தான்... அதுக்கப்புறம், மனைவி பேர் எப்படி இருந்தாலும், கல்யாணத்துக்கு அப்புறம் "தேவி" ன்னு மாத்திடுவானாம். ஏன்னா, "தேவி" ன்ற பேர் தான் அவனுக்கு ரொம்ப புடிக்குமாம்..
ஆனாலும் அவனுக்கு ஒரு கொளுகை இருந்துச்சு. வாழ்க்கையில ஒரு தடவ தான் பொண்ணு பாக்க போவானாம்..ஏனா , எந்தப் பொண்ணையும் பாத்துட்டு , பிடிக்கல ன்னு சொல்ல மாட்டானாம்..சொன்னா, அவங்க மனசு என்ன பாடு படும் னு அவனுக்குத்தெரியுமாம்..
திடீர்னு என்னிடம் வந்து ஒரு நாள் சொன்னான்..
மாப்ள , நான் நாளைக்கு மும்பை போறேண்டா.
என்னடா என்ன விஷயம்..
பொண்ணு பாக்கப் போறேன் மச்சி , மேட்ரிமோனியல் ஸைட் ல பாத்தேன். என்னோட ப்ரொபைல் அனுப்பினேன். பதிலுக்கு அவங்க போட்டோ அனுப்பினாங்க.. நான் எதிர் பார்த்த மாதிரியே இருக்குடா..
ஆமாடா, நீ போட்டோ அனுப்பினாயா ..?
அனுப்பினேண்டா..
ஏண்டா, உன் போட்டோவை பாத்த பிறகும் அவங்க பதில் அனுப்பினாங்களா ?
டேய், எனக்கு என்னடா குறைச்சல் ..
(அடப்பாவி, பேரழகன் சூர்யா மாதிரி பேசறானே? ) அடேய், உனக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடா. ஆனா , உன் எதிர்பார்ப்பு தான் டா அதிகம்..அதக் குறைச்சிக்க.. ஆமா , நீ அனுப்பின போட்டோ வைக் காண்பி..
பையில் இருந்து ஒன்றை எடுத்துக் காண்பித்தான்..
ஆயிரம் இடி தலையில் இறங்கியது போல அதிர்ச்சி..
அடேய், இது நீயா ?
ஆமாடா , புது மாப்பிள்ளைக்குன்னே எடுக்குறது.. லைட்டிங் எஃபக்டில் வழுக்கையே தெரியாமா எடுப்பார்..
ஆமா, உன் கன்னம் ரெண்டும் எப்படிடா, இப்டி உப்பி புஸ்ஸுன்னு இருக்கு?
அது வந்து ... போட்டோகிராபர் தாண்டா, டொக்கு தெரியக் கூடாது ன்றதுக்க்காக , வாய்க்குள்ள கொஞ்சம் காத்தை உள்ளே இழுத்து வச்சிக்கங்க ன்னு சொன்னார்
ஆமா, உன் உதடு எப்படிடா , இப்படி ரோஸ் கலர் ல , மூஞ்சியும் பள பள ன்னு..
அதெல்லாம் போட்டோ ஷாப் ல பண்ணது மாப்ள..
இப்படி கொஞ்சம் கூட , குற்ற உணர்ச்சியே இல்லாம ஏன்டா அந்தப் பொண்ண ஏமாத்துற ? ஆமா, எப்டின்னாலும் , நீ நேராப் போயி நின்னா , எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆயிடுமே டா
இல்ல மச்சி.. பொண்ணுங்க அழகுக்கு முக்கியத்துவம் தரமாட்டாங்க.. ..அவளை நேராப் பாத்து பேசி, என் படிப்பு , வேலை , என் சம்பளம் .அப்புறம் என் குணம் எல்லாத்தையும் சொல்லி , அவங்க அப்பா அம்மா ரெண்டு பேர் சம்மதிக்க வச்சிருவன் டா.. போட்டோவைப் பாத்ததில் இருந்து அந்தப் பொண்ணை உயிருக்குயிரா காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் மச்சி..அவங்க அப்பா பெரிய பிஸினஸ்மேன். நல்ல குணமான மாப்ளை யை தான் டா எதிர் பார்க்கிறாரு..
சரி டா.. உங்க அப்பா , அம்மா சரின்னு சொல்லிட்டாங்களா?
இல்லடா, என் கல்யாண விஷயத்தில் அவங்க தலையிட மாட்டாங்க..நான் மட்டும் தான் போறேன். ப்ளைட் ல..
ப்ளைட்லேயா?
ஆமாடா, எப்படியும் ரீ இம்பர்ஸ் பண்ணிடலாம்.. வரதட்சிணையில..
சரி மாப்ள, உன் செல்ப் கான்பிடன்ஸ் எல்லாருக்கும் வராது.. எனி வே, ஆல் த பெஸ்ட்
அதன் பிறகு , அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. ஒரு வாரம் கழித்து, அவனைப் பார்த்தேன்..
. கார்த்தி, என்ன ஆச்சு. எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா .. பொண்ணைப் பாத்தியா.. ?
காற்றுப் போன பலூன் மாதிரி அவன் மூஞ்சி ஆகி விட்டது..
என்னடா, என்ன ஆச்சு.? அவங்களுக்கு பிடிக்கலையாமா ?
வாடா, கடைக்குப் போய் , தம்மடிச்சுட்டே சொல்றேன்..
சிகரெட்டை , வைத்தவன் , ஊதிய புகையை வெறித்துக் கொண்டு இருந்தான்..
என்ன மச்சி , சொல்லு..
அவங்க வீட்டுக்கு போனேன் டா.. அவங்க அப்பா, அம்மா உட்கார்ந்திருந்தாங்க. பேசிட்டு, இருந்தேன்..
ஆனா, அந்தப் பொண்ணு , என்னைய சன்னல் வழியா பாத்துட்டு, வர மாட்டேன்னு சொல்லிடுச்சு மாப்ள...அவங்க அப்பா உள்ள போனாரு.. வெளிய வந்து திடீர்னு பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம போச்சு ன்னு வந்து மழுப்புனாரு..
கடைசியில , பொண்ணைக் காண்பிக்காமயே திருப்பி அனுப்பிச்சிட்டாங்கடா, திமிர் புடிச்சவங்க..
என்னையை பாத்துட்டு , இது சரியா வராது ன்னு கொஞ்ச நாள் கழிச்சு சொல்லிருந்தாலும் பரவாயில்ல. ஆனா , என்னையை பாக்கவே விடல மச்சி , அதான் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருந்திச்சி.
ஆனா என் கொளுகைய மாத்திக்கிட்டேன் மச்சி .. பொண்ணு பாத்துட்டு , புடிக்கலைன்னா , புடிக்கலைன்னு சொல்றது தப்பில்ல. இதெல்லாம் ஸ்போர்ட்டிவ் ஆ எடுத்திக்கிடணும். என்ன நான் சொல்றது...இப்ப வேலைக்காக இன்டர்வியூ போறோம். நம்ம மனசு கோணக்கூடாதுன்னு அவன் வேலைக்கு எடுத்திடறானா இல்லியே , அது மாதிரி, நமக்கு வேலை இல்லெ ன்றதுக்காக , நமக்கு தகுதியே இல்லேன்னு ஆயிடுமா ? அந்த வேலைக்கு நமக்குப் பொருத்தம் இல்ல... அவ்வளவு தான்..” என்று தத்துவமாய் பேசிக்கொண்டே போனான்.
எனக்கு மண்டை காய்ந்தது..
இந்தக் கதய படிச்சிட்டு, உங்க கருத்தை பின்னூட்டத்தில் தெரிவிங்க.

Tuesday, June 17, 2008

சிங்கை சந்திப்பு.. விடுபட்டவை

சிங்கை சந்திப்பு, விடுபட்டவை..







* நீங்கள் ஏன் பதிவு எழுதுவதில்லை.. என கிரி கேட்டார்.. "பயமா இருக்கு" என

உண்மையைச் சொன்னேன்.. அதெல்லாம் தைரியமாக எழுதுங்க..இதுக்கெல்லாம்

பயப்படலாமா ? என்று ஆலோசனை கூறினார்..எனக்கு ஏனோ "அண்ணே, உங்களுக்கு டெர்ரர் ஃபேஸ் ண்ணே " என்று வடிவேலுவை உசுப்பி விடும் சீன் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது..

*வலைப்பதிவு எழுதி யாரும் சம்பாதிக்கிறீங்களா ? என்று சிங்கை நாதன் கேட்டார். அதற்கு கோவியார் , இந்த கார்ன் அல்வா, முறுக்கு இப்படி நொறுக்க வாய்ப்பு கிடைக்கிறதே, இது எல்லாம் சம்பாத்தியம் இல்லையா என சிக்ஸர் அடித்தார்..




* பாரி அரசிடம் நிறைய நேரம் பேசுபவர்களின் , தமிழ் கலைச்சொல் களஞ்சியம் (

vocabulary ?) வளமாகும். தங்கு தடையின்றி பேசி ,நமக்கும் அது போலப் பேச வேண்டும் என ஆவலைத் தூண்டுகிறார்.

* இது போல் ஆவல் தூண்டப்பட்டு , முகவை மைந்தன். கடந்த முறை ஊருக்கு சென்று பழைய நண்பர்களிடம் பேசும் போது, "நான் யூஸ் பண்றேன்" ன்னு சொல்வதை தவிர்த்து, "நான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறேன், பயன் படுத்திக் கொள்ளவில்லை , " என்று சொன்னதும் , நண்பர்கள் இரண்டடி விலகி நின்று பார்த்ததாக சொன்னார்..



* வலைப்பதிவை , குடும்பத்தினர் படிக்கிறார்களா என்ற கேள்விக்கு கோவியார் அளித்த பதில் , என் அண்ணன் படிச்சுட்டு , சந்தேகம் வந்து, அதை உறுதி செய்வது போல் , ஏதோ ரகசிய சந்திப்புக்கெல்லாம் போய்ட்டு வாரான் " என்று நினைத்து, இவன் நக்ஸல் கூட்டத்தோடு தொடர்பு வைத்துள்ளான் , என்று வீட்டில் போட்டுக் கொடுத்ததாக கூறினார்




*வடுவூர் குமார், சில நல்ல பதிவுகளின் முகவரி கொடுத்தார். அதோடு, அவர் போல துறை சார்ந்த பதிவுகள் எழுதலாம் என ஆலோசனை கொடுத்தார்.

*ஜெகதீசன் , அமைதியாக அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்..நானும் , அவருக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தேன்..அமைதியாகத்தான்..


நான்கு மணி நேர சுக அனுபவம்....