Wednesday, June 25, 2008

பொண்ணு பாத்துட்டு பிடிக்கலைன்னு சொன்னா, தப்பா ?

பொண்ணு பாத்துட்டு பிடிக்கலைன்னு சொன்னா, தப்பா ?



வாழ்க்கையிலேயே , நமக்கு ரொம்ப சஸ்பென்ஸ், த்ரில் , எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்துவது , நம்மோட வாழ்க்கைத் துணையை முதன் முதலா சந்திக்கும் அந்த நேரம் தான்.
சில பேருக்கு அதிர்ஷ்டவசமா , பார்க்கிற முதல் பொண்ணே புடிச்சிப் போயி, கல்யாணம் அமைஞ்சிருது..
ஆனா , சில பேரு , பொழுது போலைன்னா , "வாங்க, அப்படியே , ஜாலியா , பொண்ணு பாத்துட்டு வரலாம்" ன்ற ரேஞ்சுக்கு திரிவாங்க...
ஆனா என் நண்பன் ஒருத்தன் இருக்கிறான் அவனுக்கு வரப் போற மனைவிக்கு ,சில தகுதி வச்சிருந்தான்.
. முழங்கால் வரையும் கூந்தல் இருக்கணும்( அவனுக்கு முடி, பின்னந்தலையில் இருந்து தான் ஆரம்பிக்கும்). சிரிக்கும் போது குழி விழணுமாம். ( தலைவருக்கு, சிரிக்காமலேயே , ஆழக் குழி இருக்கும் , டொக்கு கன்னம் ). உதட்டோரம் மச்சம் வேணுமாம்..(இதில் மட்டும் அவன் க்வாலிபைடு .உடம்பெல்லாம் மச்சக் கலர் தான் ) .அப்புறம், வாய் , உதடு, இடுப்பென்று , தலையிலிருந்து பாதம் வரை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ப்ளான் வைத்திருந்தான்... அதுக்கப்புறம், மனைவி பேர் எப்படி இருந்தாலும், கல்யாணத்துக்கு அப்புறம் "தேவி" ன்னு மாத்திடுவானாம். ஏன்னா, "தேவி" ன்ற பேர் தான் அவனுக்கு ரொம்ப புடிக்குமாம்..
ஆனாலும் அவனுக்கு ஒரு கொளுகை இருந்துச்சு. வாழ்க்கையில ஒரு தடவ தான் பொண்ணு பாக்க போவானாம்..ஏனா , எந்தப் பொண்ணையும் பாத்துட்டு , பிடிக்கல ன்னு சொல்ல மாட்டானாம்..சொன்னா, அவங்க மனசு என்ன பாடு படும் னு அவனுக்குத்தெரியுமாம்..
திடீர்னு என்னிடம் வந்து ஒரு நாள் சொன்னான்..
மாப்ள , நான் நாளைக்கு மும்பை போறேண்டா.
என்னடா என்ன விஷயம்..
பொண்ணு பாக்கப் போறேன் மச்சி , மேட்ரிமோனியல் ஸைட் ல பாத்தேன். என்னோட ப்ரொபைல் அனுப்பினேன். பதிலுக்கு அவங்க போட்டோ அனுப்பினாங்க.. நான் எதிர் பார்த்த மாதிரியே இருக்குடா..
ஆமாடா, நீ போட்டோ அனுப்பினாயா ..?
அனுப்பினேண்டா..
ஏண்டா, உன் போட்டோவை பாத்த பிறகும் அவங்க பதில் அனுப்பினாங்களா ?
டேய், எனக்கு என்னடா குறைச்சல் ..
(அடப்பாவி, பேரழகன் சூர்யா மாதிரி பேசறானே? ) அடேய், உனக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடா. ஆனா , உன் எதிர்பார்ப்பு தான் டா அதிகம்..அதக் குறைச்சிக்க.. ஆமா , நீ அனுப்பின போட்டோ வைக் காண்பி..
பையில் இருந்து ஒன்றை எடுத்துக் காண்பித்தான்..
ஆயிரம் இடி தலையில் இறங்கியது போல அதிர்ச்சி..
அடேய், இது நீயா ?
ஆமாடா , புது மாப்பிள்ளைக்குன்னே எடுக்குறது.. லைட்டிங் எஃபக்டில் வழுக்கையே தெரியாமா எடுப்பார்..
ஆமா, உன் கன்னம் ரெண்டும் எப்படிடா, இப்டி உப்பி புஸ்ஸுன்னு இருக்கு?
அது வந்து ... போட்டோகிராபர் தாண்டா, டொக்கு தெரியக் கூடாது ன்றதுக்க்காக , வாய்க்குள்ள கொஞ்சம் காத்தை உள்ளே இழுத்து வச்சிக்கங்க ன்னு சொன்னார்
ஆமா, உன் உதடு எப்படிடா , இப்படி ரோஸ் கலர் ல , மூஞ்சியும் பள பள ன்னு..
அதெல்லாம் போட்டோ ஷாப் ல பண்ணது மாப்ள..
இப்படி கொஞ்சம் கூட , குற்ற உணர்ச்சியே இல்லாம ஏன்டா அந்தப் பொண்ண ஏமாத்துற ? ஆமா, எப்டின்னாலும் , நீ நேராப் போயி நின்னா , எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆயிடுமே டா
இல்ல மச்சி.. பொண்ணுங்க அழகுக்கு முக்கியத்துவம் தரமாட்டாங்க.. ..அவளை நேராப் பாத்து பேசி, என் படிப்பு , வேலை , என் சம்பளம் .அப்புறம் என் குணம் எல்லாத்தையும் சொல்லி , அவங்க அப்பா அம்மா ரெண்டு பேர் சம்மதிக்க வச்சிருவன் டா.. போட்டோவைப் பாத்ததில் இருந்து அந்தப் பொண்ணை உயிருக்குயிரா காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் மச்சி..அவங்க அப்பா பெரிய பிஸினஸ்மேன். நல்ல குணமான மாப்ளை யை தான் டா எதிர் பார்க்கிறாரு..
சரி டா.. உங்க அப்பா , அம்மா சரின்னு சொல்லிட்டாங்களா?
இல்லடா, என் கல்யாண விஷயத்தில் அவங்க தலையிட மாட்டாங்க..நான் மட்டும் தான் போறேன். ப்ளைட் ல..
ப்ளைட்லேயா?
ஆமாடா, எப்படியும் ரீ இம்பர்ஸ் பண்ணிடலாம்.. வரதட்சிணையில..
சரி மாப்ள, உன் செல்ப் கான்பிடன்ஸ் எல்லாருக்கும் வராது.. எனி வே, ஆல் த பெஸ்ட்
அதன் பிறகு , அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. ஒரு வாரம் கழித்து, அவனைப் பார்த்தேன்..
. கார்த்தி, என்ன ஆச்சு. எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா .. பொண்ணைப் பாத்தியா.. ?
காற்றுப் போன பலூன் மாதிரி அவன் மூஞ்சி ஆகி விட்டது..
என்னடா, என்ன ஆச்சு.? அவங்களுக்கு பிடிக்கலையாமா ?
வாடா, கடைக்குப் போய் , தம்மடிச்சுட்டே சொல்றேன்..
சிகரெட்டை , வைத்தவன் , ஊதிய புகையை வெறித்துக் கொண்டு இருந்தான்..
என்ன மச்சி , சொல்லு..
அவங்க வீட்டுக்கு போனேன் டா.. அவங்க அப்பா, அம்மா உட்கார்ந்திருந்தாங்க. பேசிட்டு, இருந்தேன்..
ஆனா, அந்தப் பொண்ணு , என்னைய சன்னல் வழியா பாத்துட்டு, வர மாட்டேன்னு சொல்லிடுச்சு மாப்ள...அவங்க அப்பா உள்ள போனாரு.. வெளிய வந்து திடீர்னு பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம போச்சு ன்னு வந்து மழுப்புனாரு..
கடைசியில , பொண்ணைக் காண்பிக்காமயே திருப்பி அனுப்பிச்சிட்டாங்கடா, திமிர் புடிச்சவங்க..
என்னையை பாத்துட்டு , இது சரியா வராது ன்னு கொஞ்ச நாள் கழிச்சு சொல்லிருந்தாலும் பரவாயில்ல. ஆனா , என்னையை பாக்கவே விடல மச்சி , அதான் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருந்திச்சி.
ஆனா என் கொளுகைய மாத்திக்கிட்டேன் மச்சி .. பொண்ணு பாத்துட்டு , புடிக்கலைன்னா , புடிக்கலைன்னு சொல்றது தப்பில்ல. இதெல்லாம் ஸ்போர்ட்டிவ் ஆ எடுத்திக்கிடணும். என்ன நான் சொல்றது...இப்ப வேலைக்காக இன்டர்வியூ போறோம். நம்ம மனசு கோணக்கூடாதுன்னு அவன் வேலைக்கு எடுத்திடறானா இல்லியே , அது மாதிரி, நமக்கு வேலை இல்லெ ன்றதுக்காக , நமக்கு தகுதியே இல்லேன்னு ஆயிடுமா ? அந்த வேலைக்கு நமக்குப் பொருத்தம் இல்ல... அவ்வளவு தான்..” என்று தத்துவமாய் பேசிக்கொண்டே போனான்.
எனக்கு மண்டை காய்ந்தது..
இந்தக் கதய படிச்சிட்டு, உங்க கருத்தை பின்னூட்டத்தில் தெரிவிங்க.

Tuesday, June 17, 2008

சிங்கை சந்திப்பு.. விடுபட்டவை

சிங்கை சந்திப்பு, விடுபட்டவை..







* நீங்கள் ஏன் பதிவு எழுதுவதில்லை.. என கிரி கேட்டார்.. "பயமா இருக்கு" என

உண்மையைச் சொன்னேன்.. அதெல்லாம் தைரியமாக எழுதுங்க..இதுக்கெல்லாம்

பயப்படலாமா ? என்று ஆலோசனை கூறினார்..எனக்கு ஏனோ "அண்ணே, உங்களுக்கு டெர்ரர் ஃபேஸ் ண்ணே " என்று வடிவேலுவை உசுப்பி விடும் சீன் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது..

*வலைப்பதிவு எழுதி யாரும் சம்பாதிக்கிறீங்களா ? என்று சிங்கை நாதன் கேட்டார். அதற்கு கோவியார் , இந்த கார்ன் அல்வா, முறுக்கு இப்படி நொறுக்க வாய்ப்பு கிடைக்கிறதே, இது எல்லாம் சம்பாத்தியம் இல்லையா என சிக்ஸர் அடித்தார்..




* பாரி அரசிடம் நிறைய நேரம் பேசுபவர்களின் , தமிழ் கலைச்சொல் களஞ்சியம் (

vocabulary ?) வளமாகும். தங்கு தடையின்றி பேசி ,நமக்கும் அது போலப் பேச வேண்டும் என ஆவலைத் தூண்டுகிறார்.

* இது போல் ஆவல் தூண்டப்பட்டு , முகவை மைந்தன். கடந்த முறை ஊருக்கு சென்று பழைய நண்பர்களிடம் பேசும் போது, "நான் யூஸ் பண்றேன்" ன்னு சொல்வதை தவிர்த்து, "நான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறேன், பயன் படுத்திக் கொள்ளவில்லை , " என்று சொன்னதும் , நண்பர்கள் இரண்டடி விலகி நின்று பார்த்ததாக சொன்னார்..



* வலைப்பதிவை , குடும்பத்தினர் படிக்கிறார்களா என்ற கேள்விக்கு கோவியார் அளித்த பதில் , என் அண்ணன் படிச்சுட்டு , சந்தேகம் வந்து, அதை உறுதி செய்வது போல் , ஏதோ ரகசிய சந்திப்புக்கெல்லாம் போய்ட்டு வாரான் " என்று நினைத்து, இவன் நக்ஸல் கூட்டத்தோடு தொடர்பு வைத்துள்ளான் , என்று வீட்டில் போட்டுக் கொடுத்ததாக கூறினார்




*வடுவூர் குமார், சில நல்ல பதிவுகளின் முகவரி கொடுத்தார். அதோடு, அவர் போல துறை சார்ந்த பதிவுகள் எழுதலாம் என ஆலோசனை கொடுத்தார்.

*ஜெகதீசன் , அமைதியாக அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்..நானும் , அவருக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தேன்..அமைதியாகத்தான்..


நான்கு மணி நேர சுக அனுபவம்....